நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே நமது உடல் பாதுகாப்புக்கு தேவையான அத்தனை போஷாக்குகளும் கிடைத்துவிடும். அதுவும் இல்லாமல் நமக்கு பருவகாலம் மாறுதல் அல்லது அவசரமான உடல்நிலை மாற்றம் எதற்காக வேண்டுமானாலும் நாம் உண்ணும் உணவே மருந்தாக இருக்கிறது.
1. நீர்: முக்கிய தேவையான நீர் இதில் தலையாய பங்கு வகிக்கிறது. காலையில் எழுந்ததும் குடிக்கும் நீர் நமது உடலுக்கு மிக சிறந்த கழிவு நீக்கியாக செயல்பட்டு காலைக்கடன்களை சுலபமாக முடிக்க கை கொடுக்கிறது. இதனை “நீர் சிகிச்சை “என்றே சொல்வர்.
2. இட்லி : தமிழனின் அரிய கண்டுபிடிப்பு இட்லி. இது சர்வதேச உணவு கழகத்தால் தலையாய உணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இட்லி ஒரு சரிவிகித உணவு. நம் உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் புரோட்டீன் ஆகியவை உள்ளன. ஆவியில் வேக வைப்பதால் சிறியோர் முதல் பெரியோர் வரை சிறந்த உணவு. நாம் இதனுடன் முளைகட்டிய வெந்தயத்தை சேர்த்தால் இதன் நன்மை இன்னும் அதிகமாகிறது.
3. மிளகு சீரகம் இல்லாத நமது சமையல் உண்டா.?பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பதிலிருந்து மிளகின் உயர் மருத்துவ குணம் நமக்கு புரிந்து விடும். சளி,ஜலதோஷம், இருமல்,தும்மல், இவை எல்லாம் மிளகை கண்டால் ஓடியே போய்விடும்.
அகத்தை சீராக்குவது சீரகம். வயிறு சம்பந்தமான வயிறு உப்பசம், அஜீரணக் கோளாறு, ஆகியவற்றை நீக்க சீரகம் பெரிதும் உபயோகப்படுகிறது. வடிகட்டிய நீரில் சீரகத்தை சேர்த்து காய்ச்சி குடிப்பதனால் நீரினால் உண்டாகும் தொற்றுநோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
4. கறிவேப்பிலை: நாம் காய்கறி வாங்கும் பொழுது கொசுறாக கிடைப்பதனால் கறிவேப்பிலையை அவ்வளவாக நாம் மதிப்பதில்லை. ஆனால் உண்மையில் எல்லாக் கீரைகளையும் விட மிக அதிகமான சத்துக்கள் நிறைந்தது இந்த கறிவேப்பிலை என்பது தெரியுமா உங்களுக்கு. கறிவேப்பிலையை உண்டு வந்தால் கண் நோய்களில் இருந்து விடுபடலாம். கறிவேப்பிலையை உண்டு வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும். நரைமுடி வருவது தாமதப்படும். இனி நாம் நமது சாப்பாட்டில் கறிவேப்பிலையை ஒதுக்குவதை கை விடுவோம்.
5. பிரண்டை: இதன் பெயர் வஜ்ஜிரவல்லி. இந்த பெயரே நமக்கு தேவையான விஷயங்களை சொல்லி விடுகிறது அல்லவா. ஆம்.. இந்த பிரண்டையை நமது உணவில் சேர்த்துக் கொண்டால், நமது எலும்பை வஜ்ரம் போல உறுதியாக்கும். எனவே மறக்காமல் அடிக்கடி பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்வோம். ஆனால் இதனை சமைக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். துண்டு துண்டாக நறுக்கி, எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி, சமையலில் சேர்க்க வேண்டும். இல்லையெனில் நாக்கில் மிகுந்த அரிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. சுண்டைக்காய்: என்ன சின்ன சுண்டைக்காய் சமாச்சாரம் என்று இதனை அலட்சியமாக விட்டு விடக் கூடாது. சுண்டைக்காய் நமது ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி வாய்ந்தது. குடலில் இருக்கும் பூச்சிகளை நீக்கும் பெரிய வேலையை இந்த சிறிய சுண்டைக்காய் தான் செய்கிறது. எனவே இதனை மாதம் ஒரு முறையாவது நமது சமையலில் சேர்த்துக் கொள்வோம்.