தடுப்பு மருந்து என்பது உடலில் நோய் எதிர்பாற்றல் குறையாமல் இருக்க கண்டுபிடிக்க பட்டு செலுத்த படுவது ஆகும்.
வரலாறு:
முதன்முதலில் தடுப்பூசியை கண்டுபிடித்தவர் எட்வர்ட் ஜென்னர் என்பவர் ஆவார். இவர் முதல் முறையாக பெரியம்மை நோய்கான தடுப்பூசியை கண்டுபிடித்ததால் இவரை நோயெதிர்ப்பு முறையின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது கண்டுபிடிப்பு பிற கண்டுபிடிப்புகளை காட்டிலும் மனித உயிர்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவியது.
தடுப்பூசி முறை 1721 களில் இருந்தே நடைமுறையில் உள்ளது, ஆனால் அவை உயிர் காக்கும் தன்மை கொண்டனவா என்பது அறியப்படவில்லை.
தடுப்பூசி என்பது உயிருள்ள, ஆனால் பலவீனமாக்கப்பட்ட ஒரு நுண்ணுயிரியாகவோ அல்லது நுண்ணுயிரிலிருந்து பெறப்படும் ஒரு நச்சுப்பொருளாகவோ அல்லது உயிரற்ற ஒரு நுண்ணுயிரியாகவோ இருக்கலாம்.
பல்வேறு நோய் காரணிகளால் ஏற்படும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த இந்த தடுப்பூசிகள் பெரிதும் உதவுகின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு தேவையான அளவு தடுப்பு மருந்தேற்றம் நடைபெறும் போது அந்த நோய் முழுவதுமாக நீங்கவும் வாய்ப்புகள் உண்டு ஏராளம். இதற்கு சான்றே அமெரிக்க நாட்டில் போலியோ 1979ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்ததும், சின்னம்மை எனப்படும் உயிர்கொல்லி நோயை உலகளவில் அழிந்ததும் ஆகும்.
ஆய்வுகள்:
மனிதனின் உடலில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒரு நுண்ணுயிரி செலுத்தப்படுவதால் இம்முறை பாதுகாப்பானதா என்று பல ஆய்வுகள் நடைபெற்றன. ஆய்வுகளின் முடிவில் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி முறை மிகவும் பயன்தரும் என்று அறியப்பட்டது.
வழிகள்:
தடுப்புமருந்து ஏற்றமானது வாய் வழியாகவும், ஊசிகள் மூலமாகவும், துளையிடுவதன் மூலமாகவும், மூக்கின் வழியாகவும் செலுத்தபடுகிறது.
வரலாற்றில் தடுப்பு மருந்தின் உருவாக்கம், அதன் தாக்கம் அறிந்த நாம் இன்றைய வாழ்வியலில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் அறிய வேண்டியது நம் தலையாய கடமையாகிறது.
தொற்றுநோய் பரவல் ஈராறு மாதங்கள் கடந்தும் நம்மை வதைத்து வருகிறது.
டிசம்பர் 2019 இல் தொடங்கியது இன்றும் ஓய்ந்தபாடில்லை. அன்றாடம் கனவினை தொலைத்தும், உறவினை இழந்தும் நிற்கதியாய் நிற்கும் சக மனிதர்களை காண்கிறோம்.
உணவே மருந்தென வாழ்ந்ததாலோ ஏனோ நம்மை சுற்றியுள்ள பலர் நமக்கு அரணெண வந்த தடுப்பூசிகளை செலுத்த தயங்குவதை விழியாற காண்கிறோம்.
இழந்தது போதும் இனியும் வேண்டாம் என இந்த பேரழிவைத் தடுக்க உருவெடுத்தது உயிர்கொல்லி நோயாம் கொரானாவுக்கான தடுப்பூசிகள். வெள்ளப்பெருக்கை எவ்வாறு தடுப்பணைகள் தடுக்கின்றனவோ அதுபோல் இவை மானுடப் பிறவியை காக்க வந்ததாகும்.
பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தியும் முழுமையாக அழிக்கவும் தடுப்புமருந்தே காரணம் என அறிந்திருந்தும் மக்கள் இந்நோய்கான தடுப்பூசிகள் செலுத்திகொள்ள தயக்கம் காட்டுவதை காண வியப்பை கொணர்கிறது.
மற்ற நோய்த் தடுப்பூசிகளை செலுத்த நாம் தயங்கியதில்லை. ஏன், பிறந்த குழந்தைக்கு ஜனித்த ஈரேழுநாட்களில் இருந்து அதன் அகவை ஐந்தை எட்டும் வரை பல தடுப்பூசிகளை செலுத்த தயக்கம் காட்டாத நாம் ஏன் இந்த தடுப்பூசிகளை செலுத்த தயக்கம் காட்டுகிறோம்?
இவை புதிதென்பதாலா?
அச்சிறு குழந்தைக்கு நாம் தயக்கம் இன்றி செலுத்தும் மருந்தும் ஒரு நாள் புதிதாகத்தானே இருந்தது… அன்று அம்மருந்திற்கு எவரேனும் தயங்கிருந்தால் இன்று நாம் நலமாக நடமாடுவது சந்தேகமே? சிந்தியுங்கள்.
இந்நோய் முற்றிலும் அகன்று நம் அடுத்த தலைமுறை நனி சிறந்து வாழ நாம் தடுப்பூசி செலுத்திகொள்வது அவசியமாகிறது.
நம்மால் நமக்காக உருவெடுத்த தடுப்பூசி
இதை பயன்படுத்துவோம்
பயன்பெறுவோம்
மீண்டெழுவோம்.